என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் உடல்நலம்"
- நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.
- எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துககு அவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன் விதைகள், பருப்புகள், உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்தி ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது. ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊறவைத்து அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெறலாம்.
தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக்கோளாறு இதய நோய், நீரிழிவு நோய், சரும பிரச்சனை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்பகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெராலை அதிகரித்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது பாதாம்
இதில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
ரிபோஃபிளேவின் எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்தி கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன. நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.
வயது முதிர்ச்சியால் வரக்கூடிய ஞாபக மறதி நோயை தடுக்கம் ஆற்றல் பாதாமில் உள்ளது.
பாதாம் எண்ணெய் கொண்டு சருமத்தை மசா% செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து சருமம ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
தினமும் இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும்.
மாதவிடாய் நின்ற பெண்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.
- கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான்.
- பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம்.
கர்ப்பம் என்பது பல புதிய உணர்ச்சிகள், அனுபவங்கள் மற்றும் சில பெண்களுக்கு சங்கடமான பக்க விளைவுகளுடன் வருகிறது. கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு இதுபோன்ற பொதுவான கவலைகளில் ஒன்று கர்ப்ப காலத்தில் பல் வலி.
கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.
இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.
கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?
1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள். பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல் பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஈறு நோய்கள், ஈறுகளில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல் போன்றவை இயல்பாய் ஏற்படும். அவ்வாறு ஈறு நோய்கள் ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அது போல கர்ப்பிணி பெண்களுக்கு பல் சொத்தை எளிதில் ஏற்படும். அதற்கும் முறையான சிகிச்சை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
உங்கள் பல் மருத்துவரை அணுக முடியாவிட்டால், கிராம்புத் துண்டை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது போன்ற எளிய வீட்டு வைத்தியங்களை நீங்கள் எப்போதும் முயற்சி செய்யலாம். பூண்டு கிராம்பைப் போலவே செயல்படுகிறது மற்றும் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கழுவுதல் ஈறுகளை ஆற்றவும், வாய்வழி பாக்டீரியாவைக் குறைக்கவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் ஈறுகள் வீக்கமடைவது பொதுவானது மற்றும் இந்த காலங்களில் ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் ஆகியவற்றின் தீவிரத்தை குறைக்க வாய்வழி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* நீங்கள் கடுமையான பல் வலியை அனுபவித்தாலும் வலி நிவாரணி மருந்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம். சில மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி குழந்தையை நேரடியாக பாதிக்கலாம்.
* உங்களுக்கு ஏதேனும் வீக்கம் இருந்தால், சூடான அல்லது குளிர்ந்த பேக்குகளை வைக்க வேண்டாம், உடனடியாக பல் மருத்துவரை அணுகவும்.
* நிவாரணத்திற்காக அதிகப்படியான கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் 1-2 சொட்டுகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
* சூடான மற்றும் கடினமான சீரான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* உங்கள் பல் மருத்துவரிடம் கேட்பதற்கு முன், எந்த ஜெல் அல்லது வாய்வழி களிம்புகளையும் பயன்படுத்த வேண்டாம்.
* கடைசியாக ஆனால் வலியைப் புறக்கணிக்கவோ அல்லது துன்பப்படவோ வேண்டாம். உங்கள் பல் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார் மற்றும் உங்கள் துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். உங்கள் பல் மருத்துவரைச் சந்திக்கும் போது உங்கள் எல்லா அறிக்கைகளையும் எடுத்துச் செல்வதை உறுதிசெய்யவும்.
- 35 வயதை தாண்டிய பெண்கள் கட்டாயம் 'ஜாகிங்' மேற்கொள்ளவேண்டும்.
- ஓடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
பெண்கள் 'ஜாகிங்' எனப்படும் மித ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால், அவர்களிடமிருந்து நோய்களும் ஓடிவிடும். ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. அதனால் 35 வயதை தாண்டிய பெண்கள் கட்டாயம் 'ஜாகிங்' மேற்கொள்ளவேண்டும். அப்போது தேவையில்லாத கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டமும் சீராகும். உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன், தசைகளும் வலுவடையும்.
ஓடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முறையாக ஓடுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் அது நல்லது செய்வதற்கு பதில் கெடுதலாகிவிடும். முறையாக ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளாவிட்டால் 'ரன்னர் நீ' என்ற மூட்டு பிரச்சினை ஏற்படும். எடுத்த எடுப்பிலே கடுமையான ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபட்டால் குறுத்தெலும்பு தேய்ந்து, வலி உருவாகும். மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதோ, இருக்கையில் அமர்ந்துவிட்டு எழும்போதோ மூட்டுகளில் வலிக்க ஆரம்பிப்பது இதன் அறிகுறியாகும்.
ஓட்டப் பயிற்சி பெறும் பெண்கள் எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பதைவிட, எந்த விதத்தில் ஓடுகிறோம் என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அதனால் முறையான ஆலோசனையை பெற்றுவிட்டு அவர்கள் பயிற்சியினை தொடருவது நல்லது. ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். உடல்நிலைக்கு தக்கபடியான உடற்பயிற்சிகளையே அவர்கள் செய்யவேண்டும். இதய நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அதுபோல் பருத்தி ஆடையை அணிவதும் ஏற்றதல்ல. இவை இரண்டும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. செயற்கை இழை ஆடைகளை அணிந்து ஓடும்போது வியர்வை உடலின் மேற்பரப்பில் தங்கும். அதனால் உடல் குளிர்ச்சியாகும். வெப்பமடைவது தவிர்க்கப்படும். கால்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிந்துகொண்டு பயிற்சியினை மேற்கொள்வது மிக அவசியமானது. காலணிகள் எடை குறைந்ததாகவும் இருக்கவேண்டும்.
புதிதாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் சிறிது நேரம் நடக்கவேண்டும். பின்பு சில நிமிடங்கள் ஓடவேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்தால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படாது. பயிற்சி உடலுக்கு இதமாக இருக்கும். போக்குவரத்திற்குரிய சாலைகளில் ஓடுபவர்கள் ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளை அணிவது அவசியம்.
இப்போது நிறைய பேர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தோன்றியபடி எல்லாம் நடக்கிறார்கள். நடைப்பயிற்சியையும் சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும். தலையை குனிந்தபடி சாய்ந்த நிலையில் நடந்தால் கழுத்துவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம். நடக்கும்போது கைகள் நன்றாக அசையவேண்டும். கைகளை வீசாமல் பொம்மைபோல் நடந்தால் அது முதுகெலும்புக்கு அழுத்தத்தைக்கொடுத்து வலியை ஏற்படுத்தும். சமதளத்தில் நடக்கவேண்டும். ஒரே இடத்தில் நடக்காமல் இடத்தை மாற்றிக்கொள்வது புதிய சூழலை ஏற்படுத்தும். அது நடப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும்.
- மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
- மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும்.
அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம். குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்
இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது.
கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும். மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய கால கட்டம்
- கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் மட்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் முதல் முறையாக கர்ப்பம் அடையும் பொழுது, நின்றால், நடந்தால், ஏதேனும் பொருளை குனிந்து நிமிர்ந்து எடுத்தால் கரு கலைந்து விடுமோ என்று பயந்து பயந்து தான் வேலை பார்ப்பர்.
இவ்வாறு பயம் கொள்ளும் பெண்கள், மலம் கழிக்க இந்தியன் முறையான குத்துக்காலிட்டு மலம் கழிப்பதை மேற்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்று பயம் கொள்வதில் தவறு இல்லை; ஆனால் அந்த பயத்தை ஏற்படுத்தும் விஷயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கர்ப்பிணிகள் முயலுதல் வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியன் முறை டாய்லெட் பயன்படுத்துவது குறித்த பயத்தை போக்க உதவும் தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே மற்ற நாட்டவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் முறையை பயன்படுத்தி, மலம் கழித்து உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டு இருக்க, நம் நாட்டவர்கள் மட்டும் நமக்கே உரித்தான முறையில் அதாவது இந்தியன் கழிவறை முறையான குத்துக்கால் முறையில் மலம் கழித்து கொண்டு இருக்கிறோம்.
வெஸ்டர்ன் முறையில் மலம் கழிக்க முயலுகையில் நமது உடல் உறுப்புகள் எந்த ஒரு அழுத்தத்தையும், மாற்றத்தையும் சந்திக்காமல் நேராக நிமிர்ந்த நிலையில், உட்கார்ந்தவாறே மலம் கழித்து விடலாம். ஆனால் இந்தியன் முறையில் நமது உடல் குறுக்கப்பட்டு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டு மலம் வெளியேற்றப்படுகிறது. உடலின் பாகங்களுக்கு வேலை கொடுக்கப்பட்டால் தான் அவை தொடர்ந்து இயக்க நிலையில் இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.
இந்தியன் முறையில் குத்துக்கால் இட்டு உட்கார, உடலின் தசைகள் மற்றும் குடல் பகுதிகள் நன்கு அழுத்தம் பெறுகின்றன. இந்த அழுத்தத்தால் குடல்களில் தேங்கியுள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேறி உடல் தூய்மை அடைகிறது. இந்த இரண்டு முறைகளில் நமது இந்தியன் முறையில் தான் உடலில் சரியான இடங்களில் அழுத்தம் தானாகவே கொடுக்கப்பட்டு உடல் கழிவுகள் நீக்கப்படுகின்றன. இது மிகச்சிறந்த முறையாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் மட்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில் அது தான் கரு உருவாகி வளரும் கால கட்டம் ஆகும். இந்த காலத்தில் பெண்கள் குனிந்து நிமிரும் பொழுது, மலம் கழிக்க அமரும் பொழுதும் கூட அதிக கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். கர்ப்பிணிகள் கவனக்குறைவாக நடக்க நேர்ந்தால் கருவிற்கு ஆபத்து ஏற்படலாம்; ஆனால் கர்ப்பிணிகள் பயம் கொள்ளாமல் இந்தியன் முறை கழிவறையிலேயே மெதுவாக அமர்ந்து, மலம் கழித்து விட்டு மெதுவாக எழலாம்.
கர்ப்பிணிகள் தாராளமாக இந்தியன் முறை கழிவறையை பயன்படுத்தலாம். இது எந்த வகையிலும் கர்ப்பிணிகளின் உடல் நலத்தை பாதிக்காது என்று கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்கள் அதீத ஜாக்கிரதையோடும், அடுத்ததடுத்த மாதங்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு கழிவறை முறையையும் பயன்படுத்தலாம். அவரவர்களின் வசதிக்கு ஏற்ற முறையை மேற்கொண்டு பயன்படுத்தலாம். ஆனால், வெஸ்டர்ன் முறையோடு ஒப்பிடும் பொழுது இந்தியன் முறை கழிவறை சிறந்தது என்று கூறப்படுவதால், முடிந்த அளவு கர்ப்பிணி பெண்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். இந்தியன் முறை கழிவறையில், உட்கார உடல் பாகங்கள் அழுத்தத்தை சந்திப்பதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
கர்ப்பிணிகளின் உடலுக்கு இந்தியன் டாய்லெட் முறை எந்த ஒரு பாதிப்பையும் நல்காதது போல, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் இந்த கழிப்பறை முறை ஏற்படுத்தாது. கர்ப்பிணி பெண்கள் இந்தியன் முறை டாய்லெட் பற்றி இருக்கும் தங்களது பயத்தை, சந்தேகத்தை விட்டு ஒழித்து தாராளமாக இந்த முறையை பின்பற்றலாம்; இது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் பாதுகாப்பை வழங்கும் முறை ஆகும்.
- மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
- மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் 18.1 சதவீதம் ஆகும். எனவே அரசு தொடர்ந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.
இந்த சீரான பணியில் ஏதேனும் பிறழ்வுகள் ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த உயிரணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களை தாக்குகிறது. மேலும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன.
இது புற்றுநோய் கட்டிகளாக மாறுகின்றன. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்கும் இடத்தில் வருகிறது. இத்தகைய புற்றுநோய் கட்டிகள் வலியே இல்லாமல் வளரக்கூடியது. இந்த கட்டி சிறிது, சிறிதாக வளர்ந்து கோலிக்குண்டு அளவுக்கு வந்து விடக்கூடியது.
மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நம் வீட்டில் உள்ள தாய், மனைவி, மகள் என ஒவ்வொரு பெண்மணியும் முக்கியமானவர்கள். அவர்கள் வீட்டை பொறுப்புடன் நிர்வகிப்பவர்கள். அவர்களுக்கு ஒரு நோய் என ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்து விட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய் விடும். எனவே விழிப்புணர்வுடன் இருந்தால் மார்பக புற்றுநோயை பெண்கள் எளிதில் வெல்லலாம்.
பெண்கள் தங்கள் மார்பகத்தை அவர்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு சோதனை செய்ய வேண்டும் என்றில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறையோ, ஒரு மாதத்துக்கு ஒருமுறையோ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது மார்பகத்தை தொட்டுப்பாருங்கள். இடது மார்பகத்தை வலது கையாலும், வலது மார்பகத்தை இடது கையாலும் சோதித்து பாருங்கள். குளிக்கும்போது அந்த நீரோடு தொட்டு பார்க்கும்போது எந்த கட்டி இருந்தாலும் தெரிந்து விடும்.
வழக்கமாக இருப்பதை விட ஏதாவது கட்டி மாதிரி தெரிந்தாலோ, நரம்பு சுருண்டு இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ உஷாராகி விட வேண்டும். சிறிய கட்டி தானே, வலி ஒன்றுமே இல்லையே என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. வலி இல்லாத கட்டி 2 வகையை கொண்டது. ஒன்று மார்பக புற்றுநோய் கட்டி, மற்றொன்று மார்பக நார்த்திசுக் கட்டி (Fibroadenoma) எனப்படும் சாதாரண கட்டி. இதில் எந்தவகையான கட்டி உடலில் உள்ளது என்பதை நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள் தான் பரிசோதித்து உறுதி செய்வர்.
சில பெண்கள் மார்பகத்தில் வரும் கட்டி பெரிதான பிறகே மருத்துவரிடம் ஓடுகிறார்கள். இந்த கட்டி பற்றி அவர்கள் தனது கணவரிடம் கூட தெரிவித்து இருக்க மாட்டார்கள். மருத்துவரிடம் சென்றதும் அவர் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் என கேட்பார். பெண்ணின் கணவரையும் கண்டிப்பார். பெண்கள் தங்கள் மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.
மருத்துவர் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட சில பரிசோதனைகளை எடுத்து பார்ப்பார். மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டி தான் என்று தெரியவந்தால் கட்டி உள்ள மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்பார். கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும். கீமோ தெரபி கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு உங்களது அலட்சியம் தான் முழுக்க முழுக்க காரணம் ஆகும். உங்கள் உடலை பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
எனவே மார்பகத்தில் சிறிய கட்டி வந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இப்போது ஏராளமான சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக போய் பார்க்க வேண்டும்.
தொண்டை கமறல் உள்ளது, இருமல் இருக்கிறது என்றவுடன் தனக்கு கொரோனாவாக இருக்குமோ என அச்சப்பட்டு சோதிக்கச் சொல்லும் பெண்கள், மார்பக பிரச்சினைக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். எனக்கு தெரிந்து தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் வருகிறது. அதில் 50 ஆயிரம் பேர் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே வருகிறார்கள். அவர்களுக்கு ரேடியேசன் சிகிச்சை கொடுக்க வேண்டும். மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம் தேவையா? என்பதை எண்ணிப்பாருங்கள். ஆரம்பத்திலேயே புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். எனவே பெண்களே அதிஜாக்கிரதையாக இருங்கள்.
தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630
- சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது.
- மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல்.
கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவு மற்றும் பாதுகாப்பான உடைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிகள், மேக்கப் போடுவதிலும் சற்றே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். முக அழகை மேம்படுத்திக் காட்டுவதற்கு பலவிதமான மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள மூலப் பொருட்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சில பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகள், வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:
மேக்கப் பொருட்களில் இருக்கும் பாராபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட், பித்தலேட்ஸ் போன்ற ரசாயனக் கலவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானதாகும். எனவே இத்தகைய மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதை கர்ப்ப காலம் முடியும் வரை தவிர்க்கலாம். செயற்கை நிறங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது.
சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது. ஆனால் சில அழகு சாதனப் பொருட்களில் செயற்கை ரெட்டினாய்டுகள் எனப்படும் வைட்டமின் ஏ-வின் கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கும் கிரீம்களில் காணப்படும் 'வைட்டமின் கே' ரத்தத்தை உறைய வைப்பதற்கு பயன்படுகிறது. இவை கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுதவிர மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.
மேக்கப் பொருட்களும், பாதுகாப்பான பயன்பாடும்: லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்): கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனக் கலவைகள் வயிற்றுக்குள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக தேன், ரோஸ் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலிய இயற்கை பொருட்களால் ஆன லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
முக கிரீம்: முகத்துக்கு பூசும் கிரீம்களில் செயற்கையான பொருட்கள் அல்லது ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, 'ஹைபோஅலர்ஜெனிக்', 'வாசனை இல்லாத', 'இயற்கையான' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்கலாம்.
நெயில் பாலிஷ்: நகச் சாயத்தில் 'டோலுயீன்' எனும் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இது சாப்பிடும்போது உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முடியும் வரை நகச் சாயத்தை முழுமையாக தவிர்த்து விடலாம்.
காஜல் (மை): மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல். 'கண் மை' பிடிக்காத பெண்களே இல்லை. இயற்கையான முறையில் கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'கண் மை' உபயோகிப்பது நல்லது. இது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கலாம்:
* கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட்டாலும், கர்ப்பிணி பெண்களுக்கு உரித்தான பொலிவு, அவர்களுக்கு தனி அழகை ஏற்படுத்தும்.
* ஆரோக்கியமான உணவும், பழங்களும், பச்சை காய்கறிகளும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், அழகும் இயற்கையாகவே மேம்படும்.
* கர்ப்ப காலத்தில் 100 சதவீதம் இயற்கையான மேக்கப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
- நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும்.
பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்த நோய் வருவதற்கு பரம்பரைதான் முக்கிய காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்குமானால், அந்த குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.
சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்கு செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்து விடுகிறது. பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறி சுரந்து விட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும்.
இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.
குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.
மார்பக தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பக காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.
- மற்றவர்கள் நம்மை அவமதிப்பதாக ஒருபோதும் கருதாதீர்கள்.
- எல்லாரிடமும் ஆலோசனை பெறுவதை நிறுத்துங்கள்.
பெண்கள் 30 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும். வாழ்க்கையை வசந்தமாக்க உதவும்.
உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது. ஏனெனில் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் அனுபவிக்க முடியாது. செல்வத்தை தேடவும் முடியாது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பெற்றோர் மற்றும் உங்கள் வாழ்க்கை துணை ஆகியோரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம். அவர்களிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு மற்றவர்களிடம் பேசுவதை கூடுமானவரை தவிருங்கள்.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பெறும் வெற்றி உங்களை பாதிக்கக்கூடாது. அவர்களை போல் நம்மால் வாழ முடியவில்லையே என்று ஏக்கம் கொள்ளாதீர்கள். உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்.
வருமானத்திற்கான ஆதாரமாக ஒன்றை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை மெருகேற்றி அதனை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு களாக மாற்றுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். தவறுகளை திருத்துவதற்கு தயங்காதீர்கள்.
நிராகரிப்புக்கு அஞ்சாதீர்கள். மற்றவர்கள் நம்மை அவமதிப்பதாக ஒருபோதும் கருதாதீர்கள். அது நிச்சயமாக உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும். உங்களுக்கான வாய்ப்புகளை யாராலும் தட்டிப்பறித்துவிட முடியாது. உங்கள் திறமையை நிரூபிப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக கருதி செயல்படுங்கள். அது நல்ல முடிவையே கொடுக்கும்.
உங்கள் கருத்து நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நபர்களுடன் விவாதம் செய்து உங்கள் நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.
எல்லாரிடமும் ஆலோசனை பெறுவதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
'இப்போது நமக்கு நேரம் சரி இல்லை. நல்ல வாய்ப்புகள் நம்மை தேடி வரட்டும்' என்று சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதை நிறுத்துங்கள். 'நல்ல வாய்ப்பு' என்று எதுவும் இல்லை. நாம் தான் கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
நல்ல தோழிகளை தேர்ந்தெடுத்து பழகுங்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். அதுதான் நட்பை பலப்படுத்தும்.
- 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
முதுகு எலும்புகள், தசைகள், வட்டுகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றின் கூட்டுக் கட்டமைப்பைக் கொண்டது முதுகுத்தண்டுவடம். உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது, அதிக கனமான பொருட்களைத் தூக்குவது, திடீர் இயக்கம், தும்மல், இருமல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளியின்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். இதுதவிர தசைப்பிடிப்பு, குடலிறக்கம், தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள், தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.
சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்து குறைபாட்டாலும் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தைப்பேறின்போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.
ஷிங்கிள்' எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகுவலிக்கு காரணமாகும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ, ரத்தப் பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டறிய முடியும். 90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
வலியைக் குறைக்கும் சிகிச்சைகள், தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சிகள், உடலின் சமநிலையைப் பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் முதுகுவலி வருவதை தடுக்கலாம். ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது, முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.
தினசரி காலை உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கியக் காரணமாகும். எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
- ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது.
- ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.
பெண்கள் 'ஜாக்கிங்' எனப்படும் மித ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால், அவர்களிடமிருந்து நோய்களும் ஓடிவிடும். ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. அதனால் 35 வயதை தாண்டிய பெண்கள் கட்டாயம் 'ஜாக்கிங்' மேற்கொள்ளவேண்டும். அப்போது தேவையில்லாத கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டமும் சீராகும். உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன், தசைகளும் வலுவடையும். ஓடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முறையாக ஓடுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் அது நல்லது செய்வதற்கு பதில் கெடுதலாகிவிடும்.
முறையாக ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளாவிட்டால் 'ரன்னர் நீ' என்ற மூட்டு பிரச்சினை ஏற்படும். எடுத்த எடுப்பிலே கடுமையான ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபட்டால் குறுத்தெலும்பு தேய்ந்து, வலி உருவாகும். மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதோ, இருக்கையில் அமர்ந்துவிட்டு எழும்போதோ மூட்டுகளில் வலிக்க ஆரம்பிப்பது இதன் அறிகுறியாகும்.
ஓட்டப் பயிற்சி பெறும் பெண்கள் எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பதைவிட, எந்த விதத்தில் ஓடுகிறோம் என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அதனால் முறையான ஆலோசனையை பெற்றுவிட்டு அவர்கள் பயிற்சியினை தொடருவது நல்லது. ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு பெண்கள் தங்கள் உடல் நலத்தை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பெண்கள் தங்கள் உடல்நிலைக்கு தக்கபடியான உடற்பயிற்சிகளையே அவர்கள் செய்யவேண்டும். இதய நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. அதுபோல் பருத்தி ஆடையை அணிவதும் ஏற்றதல்ல. இவை இரண்டும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. செயற்கை இழை ஆடைகளை அணிந்து ஓடும்போது வியர்வை உடலின் மேற்பரப்பில் தங்கும். அதனால் உடல் குளிர்ச்சியாகும். வெப்பமடைவது தவிர்க்கப்படும். கால்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிந்துகொண்டு பயிற்சியினை மேற்கொள்வது மிக அவசியமானது. காலணிகள் எடை குறைந்ததாகவும் இருக்கவேண்டும்.
புதிதாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் சிறிது நேரம் நடக்கவேண்டும். பின்பு சில நிமிடங்கள் ஓடவேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்தால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படாது. பயிற்சி உடலுக்கு இதமாக இருக்கும். போக்குவரத்திற்குரிய சாலைகளில் ஓடுபவர்கள் ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளை அணிவது அவசியம்.இப்போது நிறைய பேர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தோன்றியபடி எல்லாம் நடக்கிறார்கள். நடைப்பயிற்சியையும் சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும். தலையை குனிந்தபடி சாய்ந்த நிலையில் நடந்தால் கழுத்துவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம். நடக்கும்போது கைகள் நன்றாக அசையவேண்டும். கைகளை வீசாமல் பொம்மைபோல் நடந்தால் அது முதுகெலும்புக்கு அழுத்தத்தைக்கொடுத்து வலியை ஏற்படுத்தும். சமதளத்தில் நடக்கவேண்டும். ஒரே இடத்தில் நடக்காமல் இடத்தை மாற்றிக்கொள்வது புதிய சூழலை ஏற்படுத்தும். அது நடப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும்.
- தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது.
- தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது...
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
பெண்களின் உடல் கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற கால கட்டங்களில் பயங்கரமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தனக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்பதால், அவர்தம் உடல் எடை அதிகரிக்கிறது; பிரசவத்தின் பொழுது நிகழும் மாற்றங்களால், சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்; சிலருக்கு அதிகரிக்காது இருக்கலாம். ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டம் பெண்களின் கூடிய எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; இந்த ஒரு கூற்றின் உண்மை நிலை என்ன என்று இப்பொழுது படித்து அறியலாம்.!
தாய்ப்பால் அளிப்பது பெண்களின் எடையை குறைக்க உதவுமா என்ற கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்ற இரு விடைகளுமே பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பால் உருவாக பெண்ணின் உடல் சக்தியில் 25 சதவிகிதம் பயன்படுத்த படுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பு நிகழ, பெண்கள் நல்ல சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்; அச்சமயம் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவு பசியும் எடுக்கும்.
எனவே, இந்த தாய்ப்பால் அளிக்கும் முறையில் பெண்களின் எடை கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். ஆனால், இந்த நடுநிலையான ஒரு பதிலை தாண்டிய உண்மையான பதில் என்ன என்றால், அது தாய்ப்பால் அளிப்பது கண்டிப்பாக பெண்களின் உடலின் எடையை குறைய செய்கிறது என்பது தான்! உடல் எடை குறைவது, சரியாக நேர நேரத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது, குழந்தைகள் வேறு உணவு எதையும் உண்ண மாட்டார்கள்; ஆறு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கப்படும். அவ்வாறு வேறு உணவு இல்லாத, பால் மட்டும் தான் என்ற சூழலில், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலால் ஒரு நாளைக்கு 300 முதல் 700 கலோரிகள் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அளவு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே சரியாக குறையும்.
குறைந்தது 400 முதல் 600 கலோரிகளாவது பெண்ணின் உடலில் இருந்து குழந்தை பால் குடிப்பதால் குறைக்கப்பட்டு விடும்; இந்த அளவு கலோரிகள் குறைய குழந்தைகள் குறைந்த பட்சம் 20 முதல் 30 அவுன்ஸ் பாலினை கண்டிப்பாக குடித்து இருக்க வேண்டியது அவசியம்..! குழந்தைகள் ஒரு அவுன்ஸ் பால் குடிப்பதால், 20 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பெண்களின் உடலில் இருக்கும் எடையில், பிரசவம் நிகழ்ந்து, முதன் முதலாக குழந்தை பால் குடித்ததும் 300 கலோரிகள் குறைக்கப்படும். ஏனெனில் குழந்தை அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து இருப்பதால், அதனால், அதிக அளவு பாலை குடிக்க முடியாது; பின்பு நாட்கள் செல்ல குழந்தைகள் குடிக்கும் பாலின் அளவு 300 முதல் 700 வரை என்ற அளவில் இருக்கும்.
பெண்களின் உடலுக்கு சரியாக நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 வரையிலான கலோரிகள் தேவைப்படும். இதுவே குழந்தை பிறந்து பால் கொடுக்கும் சமயங்களில், குழந்தைக்கு தேவையான பால் சுரப்பு நிகழ பெண்கள் கொஞ்சம் அதிகமான கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 3000 வரையிலான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!
இதைத்தவிர ஒரு வருடம் வரை அல்லது அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களில் சிலருக்கு குடல் சார்ந்த சர்க்கரை நோய் இருந்தால், தாய்ப்பால் அளிப்பது டைப் 2 சர்க்கரை நோய் நிலையை ஏற்படுத்தலாம்!
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது, வெளியேறும் பாலின் அளவு பெண்களின் உடல் எடையை குறைக்க செய்கிறது. அது போல், கர்ப்ப காலத்தில், பிரசவம் முடிந்த சில மாதங்களில் செய்ய முடியாத, கலவியை ஒரு குறிப்பிட்ட மாதங்களை கடந்த பின் கணவருடன் சேர்ந்து செய்தால், அச்சமயம் அந்த செயலால் கூட பெண்களின் எடை குறையும்.
தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம். பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்